My Blog

Just another WordPress.com weblog

காசி வாரணாசி யாத்திரை


காசி பட்டு பனாரஸ் பட்டு வட நாட்டினர் பனாரஸ் பட்டு புடவை கட்டி திருமணம் செய்வது சிறப்பான ஒன்று. காசிப்பட்டு காசியில் நெய்யப்படும் புடவைகள் மிகவும் உயர்தரமானவை. மதிப்பிர்க்கேற்றவாறு அதன் தரமும் மாறுபடுகிறது. பெரும்பாலும் முஹம்மதிய சமுதாயத்தாரால் நெய்யப்படுகிறது.

உணவு தயிர் கத்தி போன்ற கரண்டியால் தான் வெட்டித்தருகின்றனர் அந்த அளவிற்கு திடமாகவும், சுவையாகவும் உள்ளது.இங்கு அளிக்கப்படும் லெஸ்சி மிகவும் சுவையாகவும், விலை மலிவாகவும் உள்ளது. மன்கோப்பையில் தரும் கொதிக்கும் டி, காபி, பாலினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகள், இனிப்பு புளிப்புடன் கூடிய ஜிலேபி, பாதுஷா வகைகள், இனிப்புகள் அனைத்தும் காலை டிபனுடேன் சாப்பிடுகின்றனர். இட்லி, தோசை, பூரி சப்பாத்தி ஆகிய தென் இந்திய உணவுகளும், சட்னி சாம்பாருடன், சுவையாக் கிடைக்கிறது.

காசியில் இறப்போர்க்கு மட்டுமின்றி காசிக்கு வெளியில் தொலைவில் இறந்திருந்தாலும் அவரது அஸ்தியை காசியில் கங்கையில் கரைத்து ஈமக்கிரியைகள் செய்தவுடன் அவர்களுக்கும் முக்தி கிடைக்கிறது.

சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்ள நாட்டின் பல பாகங்களிலிருந்து பெரும்பாலோனர் வந்து கற்றுக் கொள்கிறார்கள். இதற்கான சமஸ்கிருத பல்கலைக் கழகம் உள்ளது. வேதம் கற்று புலமை பெற்றுள்ள பண்டிதர்களை தரிசிக்கும் பாக்யம் பெறுகிறோம். பல மதத்தவர் பல்வேறு மொழி பேசும் யாத்ரீகர்கள் வருகை புரிகின்றனர்.

புத்த மதத்தினருக்கும் காசி சிறப்புத் தலம். ஞானம் பெற்ற புத்தர் முதல் போதனையை இங்கே தான் துவக்கினார். மகாவீரருக்கு முன்னோடியான தீர்த்தங்கர பரஸ்வநாதர் அவதரித்த இடம் ஆதலால் ஜெயினர்களுக்கு புண்ணிய இடம்.

காசியில் பக்தர்களிடம் மக்கள் காட்டும் அன்பும் பரிவும் பக்தியும் அதிகம். தெருவில் கேட்பாரற்று திரியும் பசுக்களும் நம்மைக்கண்டு மிரல்வதில்லை. சிறிய சந்துகளிலெல்லாம் நின்று கொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ இருக்கும். மனிதர்களை கண்டால் வழி விடுகிறது. சாயந்திரமானால் பசுவின் பாலை கறந்து விட்டு மறுபடியும் மேய விட்டு விடுகிறார்கள். பசுவிற்கு உணவு அல்லது நீர் தேவையானால் அது வீட்டு வாசலில் அல்லது மடாலயத்தின் வாசலில் வந்து நின்று தேவை பூர்த்தியாகும் வரை இருந்து பின் செல்கிறது.

காசிக்கு சென்ற பலன் பாவங்களை போக்கி மனிதனைக் குற்ற உணர்விலிருந்து மீட்டெடுத்து அவனது எஞ்சிய வாழ்வை அவனுக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக நல்வழியில் செலுத்தத்தக்க சக்தி கொண்டது தான் காசித்தலமும் கங்கைக்கரையும். பொருள் இல்லாதவர்களால் முடியாது பொருள் இருந்தும் அவர்களுக்கு பிராப்தி இருந்தால் தான் காசி பயணம் செல்ல முடியும்.

செப்புக் கலசத்தில் அடைக்கப்பட்ட கங்கை நீர் எத்தனை வருடங்கள் ஆனாலும் சிறிதும் கெடாமல் நன்றாகவே இருப்பது காசி ஸ்தலத்தின் மகிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

காசியில் உதய சூரியனை ஆராதிப்பதர்க்காகவே அதிகாலையில்/ மாலையில் கங்கையில் நீராடி பிரார்த்தனை செய்து புண்ணியம் பெற பக்தர்கள் விழைகின்றனர். ஓம் நமச்சிவாய ஜெய ஜெய சிவஷங்கர் என்கிற கோஷம் எந்நேரமும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது

காசி ஷேத்திரத்தில் ஒவ்வொரு வீதியிலும் தெருவுக்குத் தெரு கோவில்களும் புண்ணிய தீர்த்தங்களும், புண்ணிய மடாலயங்களும் உள்ளன. சுமாராக இரண்டாயிரம் கோவில்களுக்கு மேல் காசியில் உள்ளது. காசியில் சந்துகள் எல்லாம் கங்கை கரையை நோக்கியே செல்கிறது.

சைக்கிள் ரிக்க்ஷா அதிகம் உள்ள நகரம். சிறிய சந்துகளில் பயணிக்க காசி மாநகரை முழுமையாக காண சைக்கிள் ரிக்க்ஷா தான் ஏற்றது. பெரும்பாலும் சாதரண மக்கள், யாத்ரீகர்கள் இதில் தான் பயணிக்கின்றனர். மூன்று கிலோ மீடேருக்கு ருபாய் 15 தான் மிகவும் குறைவான தொகை தான்.

காசியில் வசதி குறைவாக இருந்தாலும், காசிக்குப் போகவிரும்புவோர் ஏராளம். காசிக்கு சென்று திரும்புவதில் ஒரு சந்தோஷம். காசிக்கு சென்று திரும்பியவர்களை காண்பதும் புனிதமாக கருதப்படுகிறது. மற்றவர்களுக்கும் காசிக்கு செல்லவேண்டும் என்ற உந்துதலை வளர்க்கிறது.

கங்கைக்கரையில் மகான்களும் மகாராஜாக்களும் பக்தர்களும் பல தீர்த்தக்கட்டங்களை அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அமைத்தவர் பெயரில் அழைக்கப்படுகிறது. கங்கைகரையை ஒட்டி பல ஆலயங்கள் உள்ளன. தங்குமிடம் கொண்ட வசதியான மடாலயங்களும் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் அந்த அந்த வகுப்பாருக்கு முன்னுரிமை அளித்து வழ்ங்கப்படுகிறது.

மக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசி வந்து கங்கா ஸ்நானம் செய்து காசி விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எந்த ஒரு வசதியும் எதிர்பார்க்காமல் நாம் வாழ்கின்ற சூழ்நிலைக்கு எதிர்மாறான சூழ்நிலையிலும் நெரிசலில் இடிபட்டு மற்ற அசொவ்கர்யங்களை மறந்து கடவுளை தியானிப்பது ஒன்றே குறியாக கூட்டம் கூட்டமாக அலைமோதும் காட்சியை காண்பதே பெரும் புண்ணியம். மனபாரம், குடும்பக்கவலை, அலுவலகக் கவலை இன்றி நண்பர் உறவினர் எதிரிகள் நினைவின்றி அங்கு தங்கி இருக்கும் நாட்கள் நிஜமாகவே சொர்க்கம் தான்.

மோஷமளிக்கும் அருமையான ஷேத்திரம் வேறு எங்கும் இல்லை. காசி கட்டங்களில் பல் வேறு கட்டங்களில் நடை பெரும் அனுஷ்டிக்கப்படும் ஸ்நானம், ஜபம், தியானம், தானம், தவம் முதலியவை மிக்க மஹத்துவமானது என்றும் உடன் பலன் அளிக்கக்கூடியது என்று பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது. காசி என்ற இரண்டு எழுத்துக்களுக்கான அர்த்தத்தைக் காதால் கேட்டு அனுசந்தானம் ஜபம் செய்பவர்களுக்கு மறுபடியும் கர்பபவாசமில்லை அதனால் பயமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலர் தனது அந்திம தசையில் காசியில் தனது சரீரத்தைவிட வேண்டி காசியில் வாசம் செய்கிறார்கள்.

மோஷாபுரி காசியில் பெரும்பான்மையான கட்டிடங்கள் செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளன. உத்திரப்பிரதேசம் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையாக செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளன. காரணம் புரியவில்லை? சிமெண்டின் அருமை புரியவில்லையா? அல்லது வறுமைக்கோட்டில் இருப்பதுதான் காரணமா? அப்படியென்றால் நான்கு அல்லது ஐந்து மாடி கட்டிடங்களும் இதேநிலமைதானே. காசியில் மின்சாரம் பகலில் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நின்று விடுகிறது. எப்போது வருமென்று தெரியவில்லை ஆனால் இரவில் மின்சாரம் நிற்பதில்லை மற்றும் மின்சாரம் குறைந்த மின்வலியளவு தான் வருகிறது. நல்லவேளை இரவில் நிறுத்துவதில்லை. தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை. இதுபோன்று அடுத்த மாநிலங்களுக்கு சென்று வந்தால் தான் அதன் அருமை புரிகிறது.

தென்னகத்துக் கோயில்களை போல் கோயில்களின் பிரம்மாண்டத்தை பார்க்க இயலாது ஆனால் சில கோயில் தென்னகத்து கலை அம்சத்தை பிரதி பலிக்கிறது, விசாலட்சி கோயில் ஒரு எடுத்துக்காட்டு.

தென்னகத்தில் சிவன் சன்னதி முன்பு காணப்படும் நந்தி இங்கு விஸ்வநாதர் சந்நிதியில் இல்லை. அதனால்தானோ என்னவோ காசி நகர் முழுவதும் நந்திகள் (பசுமாடுகள்) வலம் வருகின்றன.

சேதுவிலிருந்து இமயம் வரை வாழும் மக்கள் பலரது பல்வேறு பண்பாடுகள் சம்பிரதாயம் மேலும் பல்வேறு மொழி பேசும் மக்கள் வருகை புரிகின்றனர். இணைந்த பாரதத்தை இங்கு காணலாம். பாரதீய தேசிய ஒருமைப்பாட்டிற்கு முக்கிய அம்சம். காசி வெகு காலமாக தொடர்ந்து மகிமை வாய்ந்த சமஸ்கிருத மொழி போதிக்கப்படும் மையமாக இருந்து வருகிறது. காசி வாழ் வித்வான்களின் நிலையான கருத்தை நாட்டின் அணைத்து மக்களும் ஒப்புக்கொள்கின்றனர். காசி பாரதத்தின் வைணவ சைவ பௌத்த ஜைன மதங்களின் ஆன்மீக மையமாகவும் தேசியக்கலை கலாசார ஷேத்திரமகவும் திகழ்கிறது.

இங்கு சாமியார்கள் பைராகிகள் அஹோரிகள் என்ற தாந்தரீகர்கள் பாபாக்கள் சடை முடி தரித்த சாமியார்கள் என அனைவருக்கும் அன்னதான சத்திரங்களிலேயே உணவு வழ்ங்கப்படுகிறது பிட்ஷை/பிச்சை எடுக்கும் சாமியார்கள் யாரும் காசியில் இல்லை

எப்பொழுது அடுத்த பயணம் செல்லலாம்?Advertisements

ஒக்ரோபர்7, 2009 - Posted by | காசி நகர்

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: